அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார சூறாவளியை ஓரம்கட்டிய சாண்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2012 - 13:12 ஜிஎம்டி

அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்து, தேர்தல் களத்தில் காணப்பட்ட பிரச்சார சூறாவளியை, இப்போது நாட்டின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்க அச்சுறுத்தும் சாண்டி சூறாவளிக்காற்று, சற்று ஓரங்கட்டிவிட்டது.

ஹைத்தி மற்றும் பிற கரிபியன் தீவுகளை கடந்த சில நாட்களில் தாக்கி 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட இந்த சாண்டி சூறாவளி இப்போது வடக்கே நகர்ந்து, நியார்க்குக்கு அருகே இன்று திங்கட்கிழமை இரவு அமெரிக்க கிழக்கு கடற்கரை நேரப்படி சுமார் 8 மணி அளவில், அதாவது, இந்திய இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சூறாவளியி வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், கடற்கரையோர பெரு நகரங்களில் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.

நாட்டின் வர்த்தகத் தலைநகரான நியுயோர்க்கில், இதுவரை, சுமார் 3,70000 பேர் தாழ்வான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கானோரை ஏற்றிச் செல்லும் நியுயோர்க் நகர புற நகர் பாதாள ரயில் அமைப்பு நேற்றிலிருந்து மூடப்பட்டுவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருகின்றன.

தலைநகர் வாஷிங்டனிலும் இதே நிலைதான். பெமா எனப்படுகின்ற மத்திய பேரிடர் நிர்வாக அமைப்பு ஊழியர்கள் மற்றும் அவசர அத்தியாவசியப் பணியாளர்கள் தவிர, மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. வாஷிங்டனின் மெட்ரோ ரயில் மற்றும் பிற ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

நாட்டின் கிழக்குக் கடற்கரையோரத்திலிருந்து சற்று உள்ளே இருக்கும் பிலடெல்பியா போன்ற நகரங்களும் இதேபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்று தெரிகிறது.

நாடெங்கிலும் விமான சேவைகளூம் பெரிதும் பாதிக்க்பட்டுள்ளன. சூறாவளி தாக்குமென்று கூறப்பட்டுள்ள வட கிழக்குப்பகுதிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு விமானச் சேவைகளும் , நூற்றுக்கணக்கான வெளிநாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாண்டி சூறாவளியின் காரணமாக, நாட்டில் வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளும் வட கிழக்கு கடற்கரையோர மாநிலங்களில் பாதிப்படைந்துள்ளன.

அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும், நேற்று வர்ஜினியாவில் நடத்த இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்தனர். நியூ ஹேம்ப்ஷையர் மாநிலத்தில் ரோம்னி நடத்தவிருந்த மற்றுமொரு நிகழ்ச்சியும் ரத்து செய்யபட்டது.

அதிபர் ஒபாமா இன்று தனது புளோரிடா விஜயத்தை ரத்து செய்துவிட்டு, வாஷிங்டன் திரும்பி புயல் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள் எப்படி நடக்கின்றன என்பதை மேற்பார்வை செய்வார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தே தொடர்ந்து லேசான மழை பெய்து வந்தது. திங்கட்கிழமை காற்றுடன் கூடிய மழைபெய்ய ஆரம்பித்திருக்கிறது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.