அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் மீண்டும் ஆரம்பமானது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 நவம்பர், 2012 - 16:45 ஜிஎம்டி

அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாக்கி, நியு யார்க் மற்றும் நியு ஜெர்ஸி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திய சாண்டி சூறாவளியை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இரு பிரதான கட்சிகளாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கியது.

அதிபர் ஒபாமா நேற்று புதன்கிழமை இரவுவரை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஒபாமா, நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.

இன்று அதிபர் ஒபாமா நெவாடா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இந்த மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க வல்ல போர்க்கள மாநிலங்கள் பட்டியலில் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும், மற்றுமொரு போர்க்கள மாநிலமான புளோரிடாவில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரும் சாண்டியால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அங்கே குறிப்பிடத் தவறவில்லை.

இதனிடையே, சாண்டி புயல், இந்த அதிபர் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொண்டிருந்த அதிபர் ஒபமாவுக்கு ஓரளவு கைகொடுத்திருப்பது போல தோன்றுகிறது. சாண்டி போன்ற ஒரு பெரிய இயற்கை பேரழிவு நடந்த நிலையில், கட்சி மாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் தலைமைத் தளபதி என்ற நிலையில், அவர் பங்காற்றியிருக்கிறார் என்று பொதுவான ஒரு தோற்றப்பாட்டை அவரது நடவடிக்கைகள் உருவாக்கியிருக்கியிருப்பதாக செய்தி ஊடகங்களும் விமர்சகர்களும் கூறுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தை அவர் முன்பே இடைநிறுத்தி தலைநகர் வாஷிங்டனுக்கு விரைந்து வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்னர் புயல் நிவாரணப்பணிகளையும் மேற்பார்வை செய்தமை, அவரின் சரிந்து கொண்டு வந்த கருத்துக் கணிப்பு புள்ளிகளை மீண்டும் தூக்கி விட்டிருப்பது போல தோன்றுகிறது.

நியு ஜெர்ஸி மாநிலத்தின் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி குடியரசுக் கட்சியை சேர்ந்தவர். அதிபர் ஒபாமாவை பத்து நாட்களுக்கு முன்புவரை கூட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கடுமையாக விமர்சித்து வந்த இவர், புயல் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிபர் ஒபாமா அளித்து வரும் ஒத்துழைப்பை வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது, ஒபாமாவிற்கு பெரிதும் அரசியல் ரீதியாக இந்த சிக்கலான கால கட்டத்தில் உதவியிருக்கிறது என்றே கூறலாம்.

இன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமும் நடத்திய கருத்துக் கணிப்பில், ஒபாமாவுக்கு 49 சதவீத வாக்குகளும், ரொம்னிக்கு 49 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. இந்த கருத்துக் கணீப்பு ஒக்டோபர் 27 லிருந்து 30 வரை நடத்தப்பட்ட ஒன்றாகும். அதாவது புயல் தாக்கிய கால கட்டம்.

அதேபோல ஏறக்குறைய இதே காலகட்டத்தில் குடியரசுக் கட்சிக்கு சாதகமான ஒரு ஊடகமாகப் பார்க்கப்படுகின்ற பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் மற்றுமொரு கருத்துக் கணிப்பு, ஒபாமாவும், ரோம்னியும் தலா 46 சதவீத வாக்குகளைப் பெற்று சம நிலையில் இருப்பதாகவே காட்டுகிறது.

நியூயார்க் டைம்ஸ் நாளேடும், சிபிஎன் நியூஸ் நிறுவனமும் , புயல் தாக்கியதற்கு சற்று முன்பு நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், ஒபாமா 48 சதவீதமும், ரோம்னி 47 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். எனவே சராசரியாக இரு வேட்பாளர்களும் ஏறக்குறைய சமநிலையில் இருப்பது போலவே இந்தக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

ஆகவே வரும் ஒரு சில நாட்களில், தேர்தல் பிரச்சாரம் மீண்டும் உச்சகட்டத்துக்கு செல்லும் என்பது நிச்சயம்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.