ஒபாமா மீண்டும் அதிபராகத் தேர்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2012 - 09:25 ஜிஎம்டி

மீண்டும் அரியாசனம்

பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முதல் கறுப்பு இன அதிபரான ஒபாமா, தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான 270 வாக்குகளை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியைத் தோற்கடித்திருக்கிறார்.

சிகாகோவில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஒபாமா, மிட் ரோம்னியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வந்த போதிலும், மிட் ரோம்னி கடுமையான போட்டியை ஏற்படுத்திய நேரத்திலும் ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார்.

ஃபுளோரிடா மாகாண வாக்குகள் இன்னும் முடிவாகாத நிலையில், ஒபாமா 303 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிட் ரோம்னி 206 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்த வெற்றியை அடுத்து, ஒபாமா மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் நீடிப்பார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கின.

அமெரிக்க செனட் சபையில், ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், குடியரசுக் கட்சி அமெரிக்க காங்கிரஸ் சபையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

போராடித் தோல்வி

ரோம்னி வாழ்த்து

மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு, மிட் ரோம்னி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், அரசியல் மோதல்களுக்கு இடம் கொடுக்காமல், மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டியது அவசியம் என்று மிட் ரோம்னி தெரிவித்தார்.

'நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நாட்டை வேறு திசையில் கொண்டு சென்றிருப்பேன். ஆனால், மக்கள் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்திருப்பதால், நானும் அவர்களுடன் சேர்ந்து அவருக்காகவும் இந்த நாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார் மிட் ரோம்னி.

உலகத் தலைவர்கள் வாழ்த்து

மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.