மலாலா தினம்: ஏழைப் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப ஊக்கத் தொகை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 நவம்பர், 2012 - 11:59 ஜிஎம்டி
மலாலா யூஸுஃப்ஸயீ படத்துடன் ஏழைச் சிறுவன் ஒருவன்

பாகிஸ்தானில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பினால் மாதம் இரண்டு டாலர்கள் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தானில் வறுமையிலுள்ள சுமார் முப்பது லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக குரல்கொடுத்துவந்த மலாலா யூசுஃப்ஸயீ என்ற 15 வயது சிறுமி தாலிபான்களால் தலையில் சுடப்பட்டதை நினைவுகூறும் வகையில் 'மலாலா தினம்' என்ற ஒரு நிகழ்வை ஐநா மன்றம் அறிவித்த சமயத்தில், இந்த ஊக்கத் தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் சுடப்பட்ட மலாலா ஐக்கிய ராஜ்ஜியத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரோடு சேர்த்து வேறு இரண்டு பேரும் அப்போது சுடப்பட்டிருந்தனர்.

உலக அளவில் பார்க்கும்போது படிக்க வேண்டிய வயதில் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கும் மூன்று கோடிக்கும் அதிகமான பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பதற்கான செயல் நாளாக சனிக்கிழமையை அறிவித்த ஐநா மன்றம், அதற்கு மலாலா தினம் என்று பெயர் சூட்டியுள்ளது.

அதேநேரம் பாகிஸ்தானிய அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரியுமான உலகில் கல்விநிலை மேம்பாட்டுக்கான ஐநாவின் விசேட தூதர் கோர்டன் பிரவுனும் இணைந்து வஸீலா இ தலீம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தமது பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால் அவர்களுக்கு மாதம் இரண்டு டாலர்கள் அளவுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது என்பதாக இத்திட்டம் அமையவுள்ளது.

இத்திட்டத்தின் வழியாக அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் முப்பது லட்சம் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.