காசா: தொடரும் தாக்குதல்களும் அதிகரிக்கும் உயிர்ப் பலிகளும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 நவம்பர், 2012 - 11:39 ஜிஎம்டி
கடைசி மணிநேரத் தாக்குதல்களில் 26 பொதுமக்கள் பலி.

கடைசி நாள் தாக்குதல்களில் 26 பொதுமக்கள் பலி.

காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பிபிசிக்கு கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், குறித்த வீட்டில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தங்கியிருப்பதாகக் கருதியே அந்த வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியது.

ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டபோது, குறித்த ஹமாஸ் அதிகாரி அங்கு தங்கியிருந்தாரா என்பது தமக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் இஸ்ரேல் பிபிசியிடம் கூறியது.

முன்னதாக, 'இலக்குத் தவறி' இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று வெளியிட்ட தகவல் பற்றி ஆராய்ந்துவருவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

ஆனால் பின்னர், அந்த தகவலை மறுத்த இஸ்ரேல், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவரின் வீட்டின்மீது சரி்யாக இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

6-வது நாள்

காசா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல்கள் இன்று 6 நாளாக தொடர்கின்றன.

நேற்றிரவு முதல் நடந்த தாக்குதல்களில் காசாவில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடைசி மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய படையினர் கூறுகின்றனர்.

ஹமாஸ் ஆயுததாரிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தொடர்ந்தும் ராக்கெட் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

நேற்றிரவு முழுவதும் காசாவிலிருந்து ஒரு ராக்கெட் குண்டே ஏவப்பட்டுள்ளது.

ஆனால் இன்று காலை மீண்டும் காசாவுக்குள்ளிருந்து ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்ததாக இஸ்ரேலிய படையினர் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த மோதல்களில் காசாவில் 95 பேர், பெரும்பாலும் பொதுமக்கள், கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய
இஸ்ரேலியர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

'இஸ்ரேல் தான் நிறுத்த வேண்டும்'

எல்லையில் இஸ்ரேலிய துருப்புக்களும் யுத்த தாங்கிகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

எல்லையில் இஸ்ரேலிய துருப்புக்களும் யுத்த தாங்கிகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

இதேவேளை, இஸ்ரேலும் ஹமாஸும் உடனடி மோதல் தவிர்ப்புக்கு வரவேண்டுமென்று ஐநா தலைமைச் செயலர் பான்-கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல்-காசா வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்காக பான் கி மூன் கெய்ரோ செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலையும் ஹமாஸையும் ஒரு போர் நிறுத்தத்துக்கு உடன்பட வைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் வேளையில், இந்தப் போரைத் தொடங்கிய இஸ்ரேலுக்கே அதை நிறுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்று ஹமாஸ் தலைவர் காலித் மெஷால் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெத்தன்யாஹுவே ஒரு போர் நிறுத்தத்தைக் கோரியுள்ளார் என்று எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இஸ்ரேலிய அரசு அதிகாரி ஒருவர் இதை மறுத்துள்ளார்.

இதற்கு முன்னர் இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படும் சூழல் உள்ளது என்று போர் நிறுத்ததுக்கான சமரச முயற்சிகளை கெய்ரோவில் முன்னெடுத்து வரும் எகிப்தியப் பிரதமர் ஹிஷாம் காண்டில் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் தன்மை, முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிப்பதை கடினமாக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.