அதிபர் ஒபாமா பர்மாவுக்கு விஜயம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 நவம்பர், 2012 - 11:48 ஜிஎம்டி

பர்மாவுக்கு விஜயம் சென்கின்ற முதல் அமெரிக்க அதிபராக அங்கு சென்றுள்ள ஒபாமா அவர்கள், பர்மாவில் மேலும் ஆழமான மறுசீரமைப்புக்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் அவரது மோட்டார் வாகன பவனி நடந்தபோது பெருமளவிலான மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் கூடி வரவேற்பு வழங்கினார்கள்.

அதிபர் தெய்ன் செய்னுடனும், எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ சியுடனும் அவர் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இதுவரை பர்மாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்ற ஒபாமா, தொடர்ச்சியான அமெரிக்க ஆதரவு பர்மாவுக்கு உண்டு என்றும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், மேற்கு பர்மாவில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான வன்செயல்களை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதுவரை குடிமக்களாக அங்கீகாரம் பெறாத றொஹிஞ்சா முஸ்லிம்களையும் குடிமக்களாக உள்வாங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை

அதேவேளை, அதிபர் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பர்மிய அரசாங்கம், மேலும் 40 அரசியல் கைதிகளை விடுதலை செய்தது.

நாட்டின் பல சிறைகளில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் ஆரம்பமான இராணுவ ஆதரவுடனான அரசின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும் பொது மன்னிப்புக்களின் பேரில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்னமும் 200 அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக செயற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.