இஸ்ரேல்-காசா மோதல்: டெல் அவிவ் பேருந்தில் குண்டு வெடிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 நவம்பர், 2012 - 12:10 ஜிஎம்டி
குண்டு வெடித்த பேருந்து

குண்டு வெடித்த பேருந்து

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைமையகத்துக்கு எதிரே வீதியில் கண்ணாடிகள் சிதறிப்போன நிலையில் புகையைக் கக்கிக்கொண்டு இந்தப் பேருந்து நிற்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

குண்டு வைத்தவர் என்று சந்தேகிக்கப்படுபவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.

இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு, இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய குண்டு வீச்சு நீடிக்கிறது

காசாவில் இஸ்ரேலிய குண்டு வீச்சு நீடிக்கிறது.

காசாவில் செவ்வாய் இரவும் இஸ்ரேலியர்கள் கடுமையாக குண்டு வீசியிருந்தனர்.

காசா மீதான தாக்குதல்களில் இஸ்ரேல் குண்டுவீச்சு விமானங்களையும், யுத்த ஹெலிகாப்டர்களையும், போர்க் கப்பல்களையும் பயன்படுத்தியுள்ளது.

போர்நிறுத்த முயற்சிகள்

பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகளை பூமிக்கையிடியிலிருந்து ஏவிவரும் இடங்கள்தான் தமது இலக்குகளில் பாதிக்கும் அதிகம் என இஸ்ரேல் கூறுகிறது.

இன்னொருபுறம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக ஹமாஸ் ராஜீய முயற்சிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும், ஜெருசலேத்தில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளிண்டனுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதிபர் அப்பாஸோடு சேர்ந்து நின்று உரையாற்றிய பான் கி மூன், வன்முறை அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இரண்டு தனித்தனி நாடுகளை உருவாக்கும் தீர்வுத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலிய பாலஸ்தீன தகராற்றை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று மூன் வலியுறுத்தினார்.

அமெரிக்க ராஜாங்க அமைச்சரும் பாலஸ்தீன அதிபரை சந்திக்கவிருக்கிறார்.

பின்னர் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து எகிப்திய அதிபர் முகமது முர்ஸியுடன் விவாதிப்பதற்காக ஹில்லரி கிளிண்டனும், பான் கி மூனும் கெய்ரோ செல்லவிருக்கின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.