பாகிஸ்தானில் 13 பேர் இருமல் மருந்துக்குப் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 நவம்பர், 2012 - 12:13 ஜிஎம்டி
பாகிஸ்தானில் இருமல் மருந்து உட்கொண்டு உயிரிழந்தவர்களில் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்

பாகிஸ்தானில் இருமல் மருந்து உட்கொண்டு உயிரிழந்தவர்களில் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

பாகிஸ்தானில் லாஹூர் நகரில் 'நச்சுப்பொருள்' கலந்துள்ளதாகக் கூறப்படும் இருமல் (ஸிரப்) மருந்தை உட்கொண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மருந்தை விற்றுள்ள மருந்தகங்களில் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதுடன், அதன் உரிமையாளர்களையும் கைதுசெய்துள்ளனர்.

ஷாஹ்த்ரா நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ள இவர்களில் பலர் போதைப் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமலேயே விற்கப்படுகின்ற இருமல் ஸிரப் மருந்துகளை தமக்கு போதை வரவைப்பதற்காக சிலர் உட்கொள்வதாக பொலிசார் கூறுகின்றனர்.

வழமையில் போதைப் பொருள் பாவனையாளர்கள் பல வகையான போதைப் பொருட்களையும் உட்கொள்ள பயன்படுத்தும் இடமான இறந்தவர்களை புதைக்கும் இடுகாடுகளிலேயே பலர் இறந்துபோய் கிடந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் 72 மணி நேரத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பல மருந்தகங்களில் தேடுதல் நடத்தியுள்ள அதிகாரிகள் இந்த இருமல் மருந்து ஸிரப் கையிருப்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மருந்துப் பொருட்கள் காலாவதியாகி இருக்கவில்லை என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்திலும் லாஹூரில் இருதய நோயாளிகளுக்கான மருந்துகளில் கலப்படத்துக்கு உள்ளான மருந்துகளை உட்கொண்ட 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

அரச மருத்துவமனையொன்றில் இருதய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கலப்பட மருந்துப் பொருட்களாலேயே இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.