பாலஸ்தீனர்களுக்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 நவம்பர், 2012 - 16:49 ஜிஎம்டி
பாலஸ்தீனர்கள் கொண்டாட்டம்

பாலஸ்தீனர்கள் கொண்டாட்டம்

ஐநா சபையில் non-member observer state, அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள்.

மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காசா நகரிலும் மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, வாகனங்களின் ஹோர்ன்களை ஒலியெழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் அந்தஸ்தை இன்னுமொருபடி மேலே உயர்த்துகின்ற தீர்மானத்துக்கு ஐநாவின் பொதுச்சபை சாதகமாக வாக்களித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தை உறுப்பினர் அல்லாத பார்வையாளர் என்று அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேஸில் உள்ளிட்ட 138 நாடுகள் வாக்களித்தன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கலாக 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்காமல் ஒதுங்கிக்கொண்டன.

'பாலஸ்தீனத்துக்கு பிறப்புச் சான்றிதழ்'

பாலஸ்தீனர்களுக்கு சார்பாக 138 நாடுகள் வாக்களித்துள்ளன.

பாலஸ்தீனர்களுக்கு சார்பாக 138 நாடுகள் வாக்களித்துள்ளன.

வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய பாலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், 'பாலஸ்தினத்துக்கு ஐநா பொதுச்சபை பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான தீர்மானம் இது' என்று கூறினார்.

ஜிண்டால் உலக சட்டக் கல்லூரி பேராசிரியர் காந்தி

பாலஸ்தீனர்களின் புதிய அந்தஸ்து எதைக் குறிக்கிறது?

ஜிண்டால் உலக சட்டக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் எம்.காந்தி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமக்கு அங்கீகாரம் தேடி ஐநாவுக்கு வந்துள்ள பாலஸ்தீன அதிபரின் நடவடிக்கையை இஸ்ரேல் கண்டித்துள்ளது.

ஐநா பொதுச்சபையில் பேசிய ஐநாவுக்கான இஸ்ரேலின் தூதுவர் ரொன் ப்ரோஸ்ஸர், பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் அமைதி சாத்தியமாகும் என்று கூறினார்.

ஆரம்பம் முதலே பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தீர்மானத்தை எதிர்த்துவந்த அமெரிக்கா, இந்த தீர்மானத்தை 'துரதிஷ்டவசமானது' என்று வர்ணித்திருக்கிறது.

மத்திய கிழக்கில் கிழக்கு ஜெருசலேம், 1967-இல் ஆறு-நாள் போரின்போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காசா பரப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மேற்குக் கரையில் 'சுதந்திரமான, இறைமையுள்ள அரசொன்றை' உருவாக்க பாலஸ்தீனியர்கள் நீண்டகாலமாக போராடிவருகிறார்கள்.

1993-இல் இது தொடர்பில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இணக்கப்பாடும் எட்டப்பட்டது. ஆனால் இரண்டு தசாப்தங்கள் கடந்தும் அங்கு நிரந்தர தீர்வு உண்டாகவில்லை.

2011-ஆண்டு செம்டம்பரில், 1967-ம் ஆண்டு படியான எல்லைகளை முன்னிறுத்தி, ஐநாவில் முழுமையான உறுப்புரிமை கோரி பாலஸ்தீன அதிகாரசபையின் அதிபர் அப்பாஸ் முன்வைத்த தீர்மானம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டது.

அதன்பின்னரே, சற்று கீழிறங்கி, தங்களை 'உறுப்பினர் அல்லாத பார்வையாளராக' அங்கீகரிக்குமாறு ஐநாவின் பொதுச் சபையை அப்பாஸ் நாடினார்.

அதாவது வத்திக்கான் தேசம் அனுபவிக்கின்ற அந்தஸ்து தான் இது.

ஐசிசியில் வழக்குத் தொடர வாய்ப்பு

பாலஸ்தீன நிர்வாகத்தின் அதிபர் அப்பாஸ்

பாலஸ்தீனத்துக்கு முழுமையான உறுப்பினர் அந்தஸ்துகோரி முன்னர் அப்பாஸ் முன்னெடுத்த தீர்மானத்தை 2011-இல் பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.

இதுவரை காலமும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நிர்வாகத்துக்கு வெறுமனே, ஐநாவில் 'நிரந்தர பார்வையாளர்' அந்தஸ்தே இருந்துவந்தது.

இன்று பாலஸ்தீனத்துக்கு கிடைத்திருக்கின்ற இந்தப் புதிய அங்கீகாரம், அவர்களை ஐநாவின் பொதுச்சபை விவாதங்களில் பங்குகொள்ள அனுமதிக்கிறது.

ஐநாவின் துணை நிறுவனங்களிலும் ஐசிசி என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் இணைந்துகொள்ளவும் பாலஸ்தீனத்துக்கு இனி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாலஸ்தீன நிர்வாகம் ஐசிசியின் ரோம் சமவாயத்தில் கையொப்பமிட்டால், மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆக, இஸ்ரேலும் அதன் பங்காளிகளும் இதனை எப்படி பார்த்தாலும் பாலஸ்தீனம் தமக்கான சர்வதேச அங்கீகாரத்தில் இன்னொருபடி முன்னேறி இருக்கிறது என்பதுதான் இந்த அங்கீகாரத்தின் அர்த்தம்.

புதிய அங்கீகாரம் பாலஸ்தீனத்தின் 'பிறப்புச் சான்றிதழ்'?

ஐநாவில் கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் பாலஸ்தீனத்தின் பிறப்புச் சான்றிதழ் என்கிறார் அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.