சிறுவன் சேர்த்து வைத்த பாம்பு முட்டைகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 டிசம்பர், 2012 - 11:32 ஜிஎம்டி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது அலுமாரியில் சேர்த்து வைத்த பாம்பு முட்டைகள் குஞ்சு பொரித்ததால் அவனது குடும்பத்தினர் பெரும் அச்சமடைந்துவிட்டனர்.

இருந்தாலும் அந்தப் பாப்புக் குட்டிகளிடம் கடிபடாமல் அந்தச் சிறுவன் உயிர்தப்பியதே பெரும் அதிர்ஸ்டம் என்று கூறப்படுகிறது.

கைலி கும்மிங் என்ற அந்த 3 வயதான சிறுவன் குயின்ஸ்லாண்டின் டவுன்ஸ்வீலில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தில் இருந்து இந்த பாம்பு முட்டைகளை எடுத்து வந்து பல நாட்களுக்கு முன்னதாக அவற்றை ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் போட்டு வைத்திருக்கிறான்.

அந்த கொள்கலனில் கடந்த திங்கட்கிழமை அவனது தாயார் ஈஸ்டர்ன் பிரவுண் இனத்தை சேர்ந்த 7 சிறிய பம்புக்குட்டிகளை பார்த்திருக்கிறார்.

மிகவும் விஷத்தன்மை கொண்ட அந்தப் பாம்புகள் தற்போது காட்டில் விடப்பட்டுள்ளன.

அந்த பாம்புகளை காட்டில் விட்ட வடக்கு குயின்ஸ்லாண்ட் வனவிலங்கு பராமரிப்பு அமைப்பைச் சேர்ந்த டிரிஸ் பிரண்டகஸ், அவையெல்லாம் 12-15 சென்டிமீட்டர் நீளமானவை என்று கூறியுள்ளார்.

''அவற்றின் விஷப்பல் மிகச்சில மில்லிமீட்டர் நீளமானதுதான். அது சிறியதாக இருக்கும் போது அதனால் மனிதத் தோலில் கடித்து உள்ளே நுழைய முடியாது இருக்கலாம், ஆனால் பெரிய பாம்பின் அளவுக்கு சிறிய பாம்பின் பல்லும் கடுமையான விஷம் கொண்டதுதான்'' என்று அவர் செய்தி ஊடகங்களுக்கு கூறியிருக்கிறார்.

அங்குள்ள பாம்புகளை பொறுத்தவரை இன்லண்ட் தாய்பான் என்னும் பாம்புக்கு அடுத்தபடியாக மிகவும் கடுமையான விஷத்தை இந்தப் பாம்புகள் கொண்டிருக்கும்.

கடந்த செப்டம்பரில் சிட்னியை சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு இந்த இன்லாண்ட் தாய்பன் கடித்துவிட்டது. ஆனாலும் மருத்துவமனைக்கு உரிய நேரத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டதால் அவர் உயிர்தப்பித்துவிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.