அமெரிக்காவின் அடுத்த ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 13:14 ஜிஎம்டி
ஜான் கெர்ரி

ஜான் கெர்ரி வியட்நாம் யுத்தத்தில் பங்கேற்றவர்

அமெரிக்காவின் அடுத்த ராஜாங்க அமைச்சராக மஸச்சுஸெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த செனெட் உறுப்பினர் ஜான் கெர்ரியை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

இரண்டாவது பதவிக் காலத்தில் ராஜாங்க அமைச்சர் பொறுப்பில் நீடிக்கப்போவதில்லை என்று ஹில்லரி கிளிண்டன் அம்மையார் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த நியமனம் வருகிறது.

இந்த நியமனத்துக்கு காங்கிரஸ் மன்றம் ஒப்புதல் வழங்கிய உடனடியாக புதிய வருடத்தில் ராஜாங்க அமைச்சராக கெர்ரி செயல்பட ஆரம்பிப்பார்.

ஜான் கெர்ரி யார்?

2004ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர் ஜான் கெர்ரி ஆவார்.

ஜான் கெர்ரி பல ஆண்டுகளாகவே ராஜாங்க அமைச்சர் பதவியைப் பெற முயன்றுவருகிறார்.

2009ல் தனக்கு அந்தப் பதவி கிடைக்கும் என அவர் நம்பியிருந்தாலும் அதிபர் ஒபாமா ஹில்லரி கிளிண்டனைத் தெரிவுசெய்துவிட்டார்.

இந்த தடவையும்கூட இப்பதவிக்கு அதிபர் ஒபாமாவின் முதல் விருப்பமாக ஜான் கெர்ரி இருந்திருக்கவில்லை.

ஐநாவில் அமெரிக்காவின் தூதராகவுள்ள சூசன் ரைஸுக்குத்தான் இந்தப் பதவி வழங்கப்படும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தனக்கு அப்பதவி வேண்டாம் என்று ரைஸ் ஒதுங்கிக்கொண்டார்.

அதிபர் ஒபாமா ஜான் கெர்ரியை அடுத்த ராஜாங்க அமைச்சராக அறிவிக்கிறார்

அதிபர் ஒபாமா ஜான் கெர்ரியை அடுத்த ராஜாங்க அமைச்சராக அறிவிக்கிறார்

2009ஆம் ஆண்டு முதல் செனெட் அவையில் வெளியுறவு விவகாரங்கள் சம்பந்தப்பட்ட குழுவின் தலைவராக இருந்துவரும் கெர்ரிக்கு உலக விவகாரங்கள், அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கொண்டுள்ள ராஜீய உறவு போன்ற விஷயங்களெல்லாம் அத்துப்படி எனலாம்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல பிரச்சினைக்குரிய இடங்களிலும் சிலிர்த்து நிற்கும் தலைவர்களை இறகு நீவி விட ஜான் கெர்ரியைத்தான் உத்தியோகபூர்வமற்ற தூதராக ஒபாமா நிர்வாகம் பயன்படுத்திவந்துள்ளது.

ஆனால் சிரியாவின் அரசாங்கத்திடம் பேசிச் சமாளிக்க கெர்ரி செய்த முயற்சிகள் பரவலாக விமர்சிக்கப்பட்டிருந்தன.

அந்த நாடு ரணகளமாகி பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அதிபர் அஸ்ஸாத் வழிக்கு வந்துவிடுவார் என்று கெர்ரி கூறிக்கொண்டிருந்தார்.

பொறுப்பு அதிகரிக்கும்

நாட்டின் ராஜாங்க அமைச்சராக பெரியதொரு பொறுப்பை கெர்ரி சுமக்க வேண்டும்.

அமெரிக்கா மீதான உலக மக்களின் அபிப்பிராயத்தை மேம்படுத்த அயராது ராஜீயப் பணி செய்து ஒபாமா நிர்வாகத்துக்கு உதவியர் ஹில்லரி கிளிண்டன்.

புத்திசாலித்தனமான வகையில் அதிகாரத்தை செலுத்துவது என்ற பாணிக்கு அடித்தளம் இட்டவர் ஹில்லரி.

அமெரிக்காவின் செல்வாக்கு, ஆதிக்கம் பற்றியெல்லாம் கெர்ரியும் அதேவிதமான பார்வையைத்தான் கொண்டுள்ளார் என்றாலும் செயலாற்றுவதில் அவரது பாணி வித்தியாசமாக இருக்கும்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.