சீன இராணுவ அதிகாரிகளுக்கு 'ஆடம்பர விருந்து தடை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 16:12 ஜிஎம்டி
இனிமேல் ஆடம்பர ஹோட்டல்கள், செங்கம்பளங்கள், மலர் அலங்காரங்கள் கிடையாது

'இனிமேல் ஆடம்பர ஹோட்டல்கள், செங்கம்பளங்கள், மலர் அலங்காரங்கள் கிடையாது'

உலகிலேயே கிட்டத்தட்ட முப்பது லட்சம் உறுப்பினர்களுடன் ஆட்பலத்தில் மிகப்பெரிய இராணுவம் சீனாவுக்கு உரியது.

சீனாவை ஆளும் கம்யூனிஸக்கட்சியின் ஆயுதப்படை பிரிவுதான் நாட்டின் இராணுவமும் கூட.

அதன் இராணுவத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மாற்றங்கள் பொதுவாக முக்கிய சீர்திருத்தங்களாகவே பார்க்கப்படுகின்றன.

இந்த இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகள் இனிமேல் அரச செலவில் விருந்துபசார களியாட்டங்களை நடத்தக்கூடாது என்று புதிய தடை வந்திருக்கிறது.

வீணான ஆடம்பரச் செலவுகளையும் ஊழல் மோசடிகளையும் தடுக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த அறிவிப்புகளைக் கொண்டுவந்திருக்கிறது.

இனிமேல் இராணுவ உயர் அதிகாரிகளின் வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஆடம்பர விருந்துபசாரங்கள், குறிப்பாக மது விருந்துகள், முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.

இப்படியான கட்டுப்பாடுகள் தலைநகர் பீஜிங்கில் உள்ள உயர் சிவில் அதிகாரிகளுக்கும் இப்போது வந்துள்ளன.

பொதுவாக அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான 8 விதிமுறைகளை ஆளும் கம்யூனிஸக்கட்சியின் மத்திய குழு அறிவித்துள்ளது.

இராணுவ அதிகாரிகளுக்கான வரவேற்பு பதாகைகள், செங்கம்பளங்கள், மலர் அலங்காரங்கள் போன்ற படோபங்கள் எதுவும் இனி கிடையாது.

அவர்கள் எங்காவது கண்காணிப்பு வேலைகளுக்காகச் சென்றால் ஆடம்பர ஹோட்டல்களில் தங்கமுடியாது. அவர்களது வாகனங்களும் வீதிகளில் அளவுக்கதிகமாக சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு ஓடமுடியாது.

இராணுவ ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். அவர்களும் லஞ்சம் வாங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, நாட்டின் சிவில் துறையில் முதன்முறையாக, பீஜிங்கின் உள்ளூர் நிர்வாகமும் தமது அதிகாரிகளுக்கும் இப்படியான சட்டவிதிகளைக் கொண்டுவந்திருக்கிறது.

அவர்களும் ஆடம்பரங்களைக் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஊழல்களையும் மோசடிகளையும் ஒழிக்காவிட்டால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் என்று சீனாவின் புதிய அதிபர் ஷி ஜிங்பிங் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.