இராணுவம் மற்றும் சோனியாவின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 11:29 ஜிஎம்டி
இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டம் இல்லை

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டம் இல்லை


இந்தியத் தலைநகர் டெல்லியில் 6 பேரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிருக்காகப் போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் நினைவாக புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்களை ரத்துசெய்யுமாறு இந்திய இராணுவம் அதன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

23 வயதான கல்லூரி மாணவி மீதான பாலியல் கொடுமையையும் கொலையையும் கண்டித்து டெல்லியிலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் இன்னும் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.

உயிரிழந்த பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தமது அதிகாரபூர்வ புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்களை ரத்துசெய்வதற்கு இந்தியாவின் இராணுவமும் விமானப்படை மற்றும் கடற்படையினரும் முடிவெடுத்துள்ளனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் அவரது புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நிறுத்திவிட்டார். ஆதேபோல நாட்டிலுள்ள பல ஹோட்டல்களும் கேளிக்கை விடுதிகளும் கூட இம்முறை புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

அரபுலகப் புரட்சியுடன் ஒப்பீடு?

பலியான மாணவிக்கு மரியாதை செலுத்தும் முகமாக சாலைகளிலும் கடைத்தெருக்களிலும் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் காட்சியளிக்கின்றன.

ஆரம்பத்தில் குறித்த பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு எதிரான கண்டனமாகத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இப்போது மாபெரும் பெண்ணுரிமை இயக்கமாக விரிவடைந்துவருகின்றன.

துனிஷியாவில் வீதியோரத்தில் கடை வைத்திருந்த ஒருவர் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்ததுதான் அரபுலகம் எங்கும் அண்மையில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு நிலைமையையே இந்தியாவில் இப்போது பார்க்கமுடிவதாக சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த எதிர்ப்பலைகளை எப்படி சமாளிப்பது என்று இந்தியாவின் அரசியல் வர்க்கம் தடுமாறுவதைப் போலத்தான் தெரிகிறது.

அங்கு இன்னும் பழமையான எண்ண ஓட்டங்களுடன் இதற்கு பதில் கூறும் சிலரும் இருக்கிறார்கள்.

பெண்கள் குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்தினால் தான் பாலியல் கொடூரங்களைத் தடுக்க முடியும் என்று உள்ளூர் எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.