சிரியாவின் அதிபர் அசாத் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜனவரி, 2013 - 15:35 ஜிஎம்டி

தனது எதிரிகளை அல்லாவின் எதிரிகள் என்றும் மேற்குலகின் கைப்பொம்மைகள் என்றும் சிரியாவின் அதிபர் பசர் அல் அசாத் தூற்றியிருக்கின்றார்.

சிரியாவில் எதிர்த்தரப்பினருடனான மோதல்கள் மிகவும் மும்முரமடைந்துள்ள நிலையில் கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபர் பசர் அல் அசாத் அவர்கள் முதல்தடவையாக மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

மத்திய டமாஸ்கஸின் அரங்கம் ஒன்றில் தனது ஆதரவாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அசாத் அவர்கள், உள்நாட்டுப் போர் காரணமாக தனது நாட்டு மக்கள் அனுபவிக்கும் அவதியை விபரிக்கும் போது, கருமேகம் நாட்டின் அனைத்து மூலைகளிலும் மூடிக்கிடக்கின்றது என்று கூறினார்.

''இந்த கிளர்ச்சிக்கு உள்நாட்டு காரணங்களை விட அதிகமான வெளிநாட்டு காரணங்கள் பலவும் இருக்கின்றன. சிரியாவை பிளவுபட்ட ஒரு நாடாகப் பார்க்க வெளிநாடுகள் விரும்புகின்றன. வேறு சிலர் சிரியாவை பலவீனமாக்க விளைகிறார்கள். வேறு சிலர் குற்றவளிகளுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்குகிறார்கள். அண்டைநாடுகள் சிரியாவுக்கு எதிராக திரண்டுள்ளன. ஆனால் சிரியாவின் மக்கள் என்றும் பலமாகவே இருக்கிறார்கள். அவர்களை பிரிவடைய நான் என்றும் விடமாட்டேன்.''என்றார் அசாத்.

தேசிய மட்டத்தில் ஒரு சமரச பேச்சுவார்த்தையையும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பையும் நடத்துவதற்கான திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

எந்தவொரு முடிவும் மக்களின் விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இராஜதந்திர அடிப்படையிலான நகர்வுகளை சிரியா என்றும் நிராகரித்தது கிடையாது என்று கூறிய அசாத் அவர்கள், ஆனால் பயங்கரவாதக் கருத்துக்களைக் கொண்ட நபர்களுடன் சிரியா என்றும் சமரசம் செய்யாது என்றும் குறிப்பிட்டார்.

அப்படியானவர்களுடன் சமரசம் செய்ய நாம் முற்பட்டால் அது சிரியாவை பலவீனமாக்கும் என்றும் அவர் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.