பணயக் கைதி விடுவிப்பு முயற்சி தோல்வி; கமாண்டோ பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஜனவரி, 2013 - 12:00 ஜிஎம்டி
அண்மையில் வெளியான பிரஞ்சு பணயக் கைதியின் படம்

அண்மையில் வெளியான பிரஞ்சு பணயக் கைதியின் படம்

சொமாலியாவில் தீவிரவாதிகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த பிரஞ்சு பணயக் கைதி ஒருவரை விடுவிக்க பிரஞ்சுப் படையினர் நடத்திய முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுக் கமாண்டோக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒருவரைக் காணவில்லை.

கைதியை விடுவிக்க முயற்சி செய்தபோது தீவிரவாதிகளால் கடுமையான பதில் தாக்குதல் வந்தது என்றும், பணயக் கைதியாக இருந்துவந்த பிரஞ்சு உளவாளி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் பிரஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

இந்த நடவடிக்கையின்போது இஸ்லாமியவாத ஆயுததாரிகள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஆனால் பிரஞ்சு உளவாளி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், அவரை என்ன செய்யப் போகிறோம் என்று இன்னும் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அல் ஷபாப் ஆயுதக்குழு கூறுகிறது.

மாலியில் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக பிரஞ்சு துருப்புகள் மோதலில் ஈடுபட ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில், பிரஞ்சு விசேட கமாண்டோ படையினர் சொமாலியாவின் தென்பகுதியில் உள்ள அல்ஷபாப் தளத்துக்கு ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டு தலைநகர் மொகதிஷுவிலிருந்து டெனிக்ஸ் அலெக்ஸ் என்ற பிரஞ்சுக்காரர் கடத்தப்பட்டிருந்தார்.

மாலியில் பிரஞ்சுப் படைகள்

இதேவேளை, மாலியில் இஸ்லாமிய ஆயுததாரிகள் மீது பிரஞ்சுப் படைகள் தொடர்ந்தும் விமானத் தாக்குதல்கள் நடத்திவருகின்றன.

தலைநகர் பமாக்கோவை பாதுகாப்பதற்காக படைகளையும் அந்நாடு அனுப்பியுள்ளது.

மொப்டி நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கிளர்ச்சியாளர்களின் அணியொன்றின் மீது தமது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தயுள்ளதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று பிரஞ்சு விமானி ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாலிக்கும் முழுப் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும் பயங்கரவாதக் குழுக்களைத் தடுப்பதற்கு தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரான்ஸின் பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரஞ்சுப் படைகளின் உதவியுடன் முக்கிய நகரான கொன்னாவை தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக முன்னதாக மாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.