மலேசியாவில் போராட்டம் தொடரும்: ஹிண்ட்ராஃப் அமைப்பு

  • 2 ஏப்ரல் 2013
Image caption உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும் நிலையில் வேதமூர்த்தி

மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை வலியுறுத்தி இருபது நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்த ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி அதை முடித்துக் கொண்டுள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவரது உடல்நிலை கருதியே உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பு, எனினும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், ஹிண்ட்ராஃப் அமைப்பு இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் பற்றிய ஆறு அம்சக் கோரிக்கைகள் குறித்து எதிர்கட்சிகளுடன் விவாதித்தது. அதே சமயம் தமது கோரிக்கைகளை எதிர்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இருப்பினும் 21 நாட்களுக்கு பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட அவர் நிர்பந்திக்கப்பட்டார் என ஹிண்ட்ராஃப் அமைப்பின் ஆலோசகர் கணேசன் நாராயணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வேதமூர்த்தி அவர்களின் போராட்டம் வெற்றி என்று கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பு, உண்ணாவிரதக் காலத்தில் பிரதமர் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதையடுத்து முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன எனவும் கூறுகிறது.

மலேசிய எதிர்கட்சிகள் தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களில் நியாயம் உள்ளது என்று கருதினாலும், மலாய் மற்றும் சீன மக்களின் வாக்குகளை குறிவைத்து தம்முடன் வெளிப்படையாக பேசுவதற்கு அஞ்சுகின்றன எனவும் கணேசன் நாராயணன் கூறுகிறார்.