சிறார் பாலியல் துஷ்பிரயோக சர்ச்சையில் போப் ஃபிரான்சிஸ் கருத்து

  • 5 ஏப்ரல் 2013
போப் பிரான்சிஸ்
போப்பாண்டவர் பிரான்சிஸ்

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தான் போப்பாண்டவரான பின்னர் ஃபிரான்ஸிஸ் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பில் கருத்து சொல்வது இதுவே முதல்முறை.

எவ்விதத்திலும் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது செயலுக்கு பதில் சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று தான் விரும்புவதாக வத்திகானத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.

போப்பாண்டவரிடம் இருந்து கருத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக நடவடிக்கையை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறார்களுக்காகப் போராடும் ஸ்நாப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தனக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் பெனெடிக்டின் பாணியையே ஃபிரான்சிஸும் பின்பற்றுவதாகத் தெரிகிறது என்றும், போப்பாண்டவரின் கருத்து தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.