அகதி அந்தஸ்து கொடுத்தும் அடைத்து வைத்துள்ளது ஏன்?

நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார்கள் என்ற பேரில் அகதி அந்தஸ்து கொடுத்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள்
Image caption நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார்கள் என்ற அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உண்ணாவிரதத்தில்

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தம்மை முகாமிலிருந்து வெளியில் விடாது அரசாங்கம் தடுத்துவைத்துள்ளதாகக் கூறும் 28 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவோருக்கான மெல்பர்ன் இடைக்கால முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் இங்கு இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அகதி அந்தஸ்து கிடைத்த பின்னரும் மெல்பர்ன் முகாமில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு பர்மியர்களும் குவைத் நாட்டவர் ஒருவரும் 25 இலங்கையர்களும் இரண்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இலங்கைத் தமிழர் ஒருவர் கூறினார்.

2009-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற தனக்கு அகதி அந்தஸ்து கிடைத்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் தடுப்பு முகாமிலிருந்து நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

தமது பெற்றோர், மனைவி- பிள்ளைகளைப் பிரிந்து பல ஆண்டுகளான நிலையில் தமது குடும்பத்தினர் பெரும் மனவருத்தத்தில் இருப்பதாகவும் தம்மால் ஆஸ்திரேலிய மக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

உரிய விசாரணை நடைமுறைகளின்றி இவர்களை தடுத்துவைத்திருக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ள பின்னணியில், மீளாய்வு நடைமுறையொன்று தொடங்கியுள்ளபோதிலும் அதில் தமக்கு நம்பிக்கை இல்லையென்று பிபிசியிடம் பேசியவர் கூறினார்.

'56 பேர் நாட்டுக்கு அச்சுறுத்தல்': ஆஸ்திரேலிய அரசு

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கொடுக்கப்பட்ட பின்னரும் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி இவ்வாறான 56 பேர்வரை விடுவிக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம், சமூக வன்முறைகள், நாசகார சதிவேலைகள் போன்றவற்றைத் தூண்டலாம் என்ற அடிப்படையிலேயே இவ்வாறான தனிநபர்களை நாட்டின் பாதுகாப்புக் கருதி சமூகத்துடன் கலக்கவிடாது தடுத்துவைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உறுதியாக அடையாளம் காணப்பட்ட பின்னரே இப்படியான அறிவுறுத்தல்களை தாம் வழங்குவதாகவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.