அமெரிக்க அரசுதுறைச் செயலர் தென்கொரியாவில்!

  • 12 ஏப்ரல் 2013
வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை
வடகொரியா அணு குண்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை

கொரிய தீபகற்பத்தில் முறுகல்நிலை முற்றிவருகின்ற நிலையில், அமெரிக்காவின் அரசுதுறைச் செயலர் ஜோன் கெர்ரி பேச்சுவார்த்தைகளுக்காக தென்கொரியா சென்றுள்ளார்.

தென்கொரிய அதிபர், வெளியுறவு அமைச்சர் மற்றும் அந்நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத் தளபதிகளை ஜோன் கெர்ரி சந்தித்துப் பேசிவருகிறார்.

வடகொரியாவை கட்டுப்படுத்தி வைக்குமாறு ஜோன் கெர்ரி அவரது ஆசியாவுக்கான விஜயத்தின்போது சீனாவிடம் வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய வல்லமை வடகொரியாவுக்கு உள்ளது என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கையொன்று கூறியுள்ள நிலையிலேயே, அமெரிக்க அரசுதுறைச் செயலர் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார்.

அடுத்து சீனாவுக்குச் செல்லவுள்ள கெர்ரி, இந்தப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக ஜப்பானுக்கும் செல்லவுள்ளார்.