வங்கதேச தொழிலாளர் நலன்களில் ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை

  • 1 மே 2013
வங்கதேச கட்டிட விபத்தில் உயிர்தப்பியவர்கள்
Image caption வங்கதேச கட்டிட விபத்தில் உயிர்தப்பியவர்கள்

வங்கதேசத்தில் தொழிலாளர்களின் வேலைத்தள வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

தலைநகர் டாக்காவுக்கு அருகே ஒருவாரத்துக்கு முன்னர் தொழிற்சாலைக் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கு பொருட்களை வரிகளின்றியும் கோட்டா முறை இன்றியும் ஏற்றுமதி செய்வதற்கான வணிக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் தொழிலாளர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலைகளை முன்னெடுக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்று கூறுகிறது.

இதன்மூலம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பொறுப்புமிக்க தயாரிப்பு-விநியோக வழிமுறை ஒன்றை ஊக்குவிக்கும் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உள்ளது.

உலகெங்கிலும் ஆடை தயாரிப்பு தொழிற்துறையில் உள்ள தொழிலாளர்களின் வேலைக்கள நிலைமைகளின் தரம்குறித்த கேள்விகளை வங்கதேச கட்டிட விபத்து எழுப்பியுள்ளது.

இதேவேளை, கனடாவில் உள்ள வணிக நிறுவனங்களும் தொழிலாளர் நலன்களை உறுதிசெய்யும் வகையில் தமது வர்த்தக வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இணங்கியுள்ளன.

வங்கதேச விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 149 பேர் பற்றி நிலைமை இன்னும் தெரியவில்லை.