'ஐரோப்பாவில் மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்'

  • 1 மே 2013
வெளிப்படையான மத அடையாளங்களையும் மத ரீதியான ஆடைகளையும் அணிவதற்கு சில நாடுகளில் நிலவும் தடைகளையும் அறிக்கை விமர்சிக்கிறது
Image caption வெளிப்படையான மத அடையாளங்களையும் மத ரீதியான ஆடைகளையும் அணிவதற்கு சில நாடுகளில் நிலவும் தடைகளையும் அறிக்கை விமர்சிக்கிறது

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க அறிக்கையொன்று எச்சரித்துள்ளது.

வெளிப்படையான மத அடையாளங்களை அணிவது, மிருகபலிச் சடங்குகளை நடத்துவது, மத ரீதியான ஆடைகளை அணிவது, விருத்த சேதனம் செய்துகொள்வது போன்ற நடைமுறைகள் தடுக்கப்படுவதன்மூலம் மேற்கு ஐரோப்பாவில் மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அச்சுறுத்தும்படியான ஒரு சூழலை வளர்த்துக் கொண்டிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது.

பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் முகத்தை முழுமையாக மூடும் புர்கா அங்கிகளை பெண்கள் அணிவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகளையும் ஆணையத்தின் அறிக்கை விமர்சித்துள்ளது.

அதேபோல, சுவிட்சர்லாந்தில் மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் உயர்கோபுரங்களை கட்டுவதற்கு உள்ளத் தடையையும் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கண்டிக்கிறது.

இதேவேளை, மதச்சிறுபான்மை மக்கள் ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுவரும் சவுதி அரேபியா, பர்மா மற்றும் இரான் போன்ற நாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளது.