உலகப் பாரம்பரிய தலங்களில் ஜப்பானின் ஃபூஜி எரிமலை

300 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபூஜி எரிமலை வெடித்தது
Image caption 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபூஜி எரிமலை வெடித்தது

ஜப்பானின் ஃபூஜி மலையை உலகப் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக அறிவிக்க யுனெஸ்கோ நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதத்தில் கம்போடியாவில் கூடவுள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியங்களுக்கான குழாம் இதுபற்றிய தனது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது.

ஜப்பானிலேயே மிக உயர்ந்த மலையான ஃபூஜியின் உயரம் 12 ஆயிரத்து 460 அடிகள்.

உச்சியில் பனிமுகட்டோடு பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிக்கும் ஃபூஜி ஒரு எரிமலை.

ஃபூஜி எரிமலை, கடைசியாக 300 ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்தது.

ஜப்பானிய தலைநகர் டோக்யோவிலிருந்து தென்-மேற்கே அமைந்துள்ள இந்த மலையை அந்த நகரிலிருந்தபடியே பார்க்கமுடியும்.

ஜப்பானிய வரலாற்று கலைப் படைப்புகளில் பெருமளவு பேசப்பட்டுள்ள இந்த மலை, அந்நாட்டு மக்களின் புனித மலைகள் மூன்றில் ஒன்று.

ஜப்பானில் உலகப் பாரம்பரிய தலங்களாக ஏற்கனவே 16 இடங்கள் உள்ளன. 12 கலாசாரத் தலங்களும் 4 இயற்கைப் பிரதேசங்களும் இவற்றில் அடங்குகின்றன.