எகிப்துக்கான கால்நடை ஏற்றுமதியை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது

ஆஸ்திரேலியா பல நாடுகளுக்கு கால்நடை ஏற்றுமதி செய்கிறது
Image caption ஆஸ்திரேலியா பல நாடுகளுக்கு கால்நடை ஏற்றுமதி செய்கிறது

எகிப்துக்கு விலங்குகள் அனுப்பப்படுவதை இடைநிறுத்திக்கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய கால்நடை ஏற்றுமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அந்நாட்டில் உள்ள இறைச்சி வெட்டும் இடங்களில் விலங்குகள் கொடூரமாக வதைக்கப்படும் காட்சிகள் வெளியானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மிருக உரிமைகளுக்கான ஆர்வலர் குழுவொன்று இந்தக் காட்சிகளை படம்பிடித்து வெளியிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கால்நடை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

கால்நடைகள் கொடூரமாக, கருணையின்றி நடத்தப்படும் காட்சிகளே வெளியாகியிருந்தன.

கால்நடைகள் கொடூரமாக நடத்தப்படுவதாக ஏற்கனவே வெளியாகியிருந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னரே, இறைச்சி வெட்டும் இரண்டு இடங்களில் இந்தக் காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு இறைச்சிக் கூடங்களும் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்பட்டிருந்த இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமை குறித்து விசாரணைகள் நடத்துமாறு அந்நாட்டு அரசிடம் ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

எகிப்தில், ஆடு மாடுகள் கொல்லப்படுவதற்கு முன்னரே அவற்றின் குதிக்கால் தசைநார் வெட்டியெடுக்கப்படுகின்ற வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, அந்நாட்டுக்கான கால்நடை ஏற்றுமதியை 2006 முதல் 2010ம் ஆண்டுக் காலப்பகுதியிலும் ஆஸ்திரேலியா இடைநிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.