கூட்டணி இல்லாமலேயே ஆட்சி அமைக்கிறார் நவாஸ் ஷெரிப்

  • 13 மே 2013

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ள நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி இதர கட்சிகளின் தயவின்றியே ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளார் என்று அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

Image caption மூன்றாவது முறையாக பிரதமராகவுள்ள நவாஸ் ஷெரீஃப்

அக்கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான அளவில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அவர் சுயேட்சைகளின் ஆதரவை நாடக் கூடும்.

இந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றி மூலம் அவர் மூன்றாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பை பெறுவார்.

இராணுவ சதிப்புரட்சி மூலம் 1999 ஆம் ஆண்டு, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, பல ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஒருவர் ஆச்சரியப்படும் வகையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.

இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான நீதிக்கான கட்சி( தெஹ்ரீக்-இ-பாகிஸ்தான்) இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது போலத் தோன்றுகிறது.

தமது கட்சி ஒரு ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலின் முழுமையான முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

மாகாண சபை முடிவுகள்

Image caption இம்ரான் கான்

இதேபோல மாகாண சபைகளுக்கு நடைபெற்றத் தேர்தல்களில், பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.

வடமேற்கிலுள்ள கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் இம்ரான் கானின் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சிந்து மாகாணத்தில் மறைந்த பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக இதுவரை வந்துள்ள முடிவுகள் காட்டுகின்றன.

பலூசிஸ்தான் மாகாணத்தைப் பொறுத்தவரை பலூச் தேசியக் கட்சிகள் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்தாலும், முஸ்லிம் லீக்( நவாஸ்) ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நடைபெற்று முடிந்த தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாகவே நடைபெற்றதாக நாட்டின் தேர்தல் ஆணையமும், வெளிநாட்டு மேற்பார்வையாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.