பாதிரிமாரின் சிறார் துஷ்பிரயோகங்கள்: தலைமை குரு மன்னிப்பு கோரினார்

கார்டினல் ஜோர்ஜ் பெல்
Image caption கார்டினல் ஜோர்ஜ் பெல்

ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க பாதிரிமாரால் பல தசாப்தங்களாக சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளமை தொடர்பில் அந்நாட்டின் தலைமை கத்தோலிக்க மதகுரு கார்டினல் ஜோர்ஜ் பெல் மன்னிப்பு கோரியுள்ளார்.

அரச நாடாளுமன்ற விசாரணையில் சுமார் ஐந்து மணிநேரம் நடந்த காரசாரமான விசாரணையின்போது, கார்டினல் பெல் இந்த மன்னிப்பைக் கோரினார்.

அதேநேரம், சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருந்த பாதிரிமாரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் அவர் தனிப்பட்ட ரீதியில் ஈடுபட்டிருந்தாரா என்ற குற்றச்சாட்டுக்களையும் மறுத்து அவர் பதில் கூறினார்.

துஷ்பிரயோகங்களின் அளவும் பாரதூரத் தன்மையும் பரவலாக தெரிந்திருக்காதபடியாலேயே, திருச்சபைக்குள் இது தொடர்பில் அமைதியான போக்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் திருச்சபைத் தலைவர்கள் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே வாய்திறக்காமல் இருந்ததாக விசாரணைக்குழு தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பியபோது, பார்வையாளர் அரங்கிலிருந்து பலத்த கூச்சல் குழப்பம் வெளிப்பட்டது.

'பாதிக்கப்பட்டவர்கள் மீது கருணை காட்டாத சமூக சிந்தையற்றவர்' என்று பெற்றோர்கள் அமர்ந்திருந்த பார்வையாளர் அரங்கிலிருந்து ஒருவர் அவரை அழைத்தார்.

இந்த சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள மத மற்றும் அரச நிறுவனங்கள் ஏற்கனவே நடத்திவரும் விசாரணைகளுக்கு சமாந்தரமாக இந்த நாடாளுமன்ற விசாரணையும் நடந்துவருகிறது.

1930களில் இருந்து கத்தோலிக்க பாதிரிமாரால் புரியப்பட்டுள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட சிறார் துஷ்பிரயோகங்கள் பற்றி அந்நாட்டு ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர்பீடம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.