எகிப்தில் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல்: இடைக்கால அதிபர்

  • 9 ஜூலை 2013
முர்ஸி ஆதரவாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நீடிக்கின்றன.
முர்ஸி ஆதரவாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நீடிக்கின்றன.

எகிப்தில் அடுத்த வருட ஆரம்பத்தில் புதிய தேர்தல்கள் நடத்தப்படுமமென்று அந்நாட்டின் இடைக்கால அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியவாத கொள்கையின் அடிப்படையில் உருவான புதிய அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும்,அந்த மாற்றம் சம்பந்தமான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படும் என்றும் அதிபர் அத்லி மன்சூர் கூறினார்.

இராணுவத்துக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்களும் பதற்றமும் தொடரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இவ்விருதரப்பாருக்கும் இடையே கெய்ரோவின் கொத்தளப் பகுதியில் திங்களன்று நடந்த மோதல்களில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.