சீனா: முன்னணி அரசியல்வாதிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

போ சீலாய்
Image caption போ சீலாய்

சீனாவில் பழி உருவாக சரிவைக் கண்டிருந்த அரசியல்வாதி போ சீலாய் மீது லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஒன்று முன்வைத்துள்ளது.

நாட்டின் கிழக்கிலுள்ள ஜீனான் நகரின் சட்ட நடவடிக்கை அதிகாரிகள் போ மீது குற்றச்சாட்டுகளை முறைப்படி கொண்டுந்திருப்பதால், அவருக்கு எதிராக வழக்கு நடத்தப்படுவதற்கு வழியேற்பட்டுள்ளது.

சொங்கிங் என்ற பெரிய ஊரின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த போ சீலாய், ஒரு காலத்தில் நாட்டின் வளர்ந்து வரும் அரசியல் தலைவராகவும், சீனாவிலேயே அதிக செல்வாக்குடையவர்களில் ஒருவராகவும் கருதப்பட்டவர்.

பிரிட்டிஷ் தொழிலதிபர் ஒருவரது கொலையில் இவரது பெயர் அடிபட அவருக்கு சறுக்கல் ஏற்பட்டதென்று ஷங்காயில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அந்த விவகாரத்தால் ஊழல், சீனாவின் உயரதிகார மட்டத்தில் இருக்கக்கூடிய பிளவுகள் போன்றவை வெளிச்சத்துக்கு வந்தன என்றும் அவர் தெரிவிக்கிறார்.