நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.8 எம்பி)

தாயின் அனுமதியின்றி மதமாற்றம் இல்லை: மலேசியாவில் தீர்ப்பு

26 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:33 ஜிஎம்டி

தீர்ப்பை வழங்கிய இபோஃஹ் உயர்நீதிமன்றம்

மலேசியாவில் மதமாற்றம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. பெற்றோர்கள் இருவரின் சம்மதமின்றி இனி பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியாது என்று இபோஃஹ்விலுள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி என்கிற பெண்மணியின் கணவர் அவர்களது மூன்று ஆண் பிள்ளைகளை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

தாயின் அனுமதி பெறாமல் இந்த மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு செய்யப்படும்போது பிள்ளைகள் 18 வயதுக்கு கீழே இருந்தார்கள் என்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது.

இந்த வழக்கு பெற்றோர்கள் எனும் பதத்துக்கு என்ன விளக்கம் என்கிற கேள்வியை எழுப்பியது. மலேசியச் சட்டத்தின்படி பெற்றோர் என்றால் அம்மாவும் அப்பாவுமா? அல்லது அப்பா அல்லது அம்மாவா எனும் கேளவி விவாதிக்கப்பட்டது.

ஐந்து வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லீ ஸ்வீ செங், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பெற்றோர் என்றால் இருவரும் சேர்ந்தே என்று தீர்பளித்தார்.

எனவே தாயின் அனுமதியின்றி தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது செல்லாது என்று அவர் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, அது மலேசிய கட்டமைப்பில் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து, வழக்கை தாக்கல் செய்த இந்திரா காந்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் குலசேகரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.