எகிப்தில் 100க்கும் மேற்பட்ட மோர்ஸி ஆதரவாளர்கள் பலி

மோர்ஸி ஆதரவாளர்கள் பிரதான வீதியை மூட முயன்றபோது படையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது
Image caption மோர்ஸி ஆதரவாளர்கள் பிரதான வீதியை மூட முயன்றபோது படையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின்போது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக போராட்டம் நடந்துவரும் ரபா அல் அதாவியா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள தற்காலிக மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் 20 பேர் வரையிலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் 177 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தலைநகரின் வீதிகளில் மோர்ஸின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நேற்றிரவு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் அதிபர் மோர்ஸியை பதவி கவிழ்த்த இராணுவத்துக்கு ஆதரவானவர்கள் தாஹ்ரிர் சதுக்கத்தில் கூடியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு இராணுவத்துக்கு ஆணை வழங்குவதற்காக மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு இராணுவத் தளபதி ஜெனலர் அப்தல் ஃபாட்டா அல் சிஸி கோரியிருந்தார்.

இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மோர்ஸி ஆதரவாளர்கள் ரபா அல் அதாவியா பள்ளிவாசலை அண்டிய பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இவர்கள் பள்ளிவாசல் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் சூளுரைத்திருந்தார்.

மக்கள் மீது வேண்டுமென்றே இராணுவத்தினர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் கூறுகின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்