ஆஸ்திரேலியாலில் செப்டம்பர் 7 பொதுத்தேர்தல்

  • 4 ஆகஸ்ட் 2013
பிரதமர் கெவின் ரட்

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம்.

ஆனால் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இங்கு பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

நாட்டை ஆண்டுவரும் கெவின் ரட்டையும் அவரது தொழிற்கட்சியையும் எதிர்த்து எதிரணியில் உள்ள டோனி அப்பாடும் அவரது கன்சர்வேடிவ் கூட்டணியும் மோதுவதாக தேர்தல் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன.

சில மாதங்கள் முன்பு, இந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை இருந்துவந்தது.

ஆனால் பிரதமராக இருந்த ஜூலியா கில்லார்டிடம் இருந்து கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தார் அவருடைய நெடுநாள் போட்டியாளரான கெவின் ரட்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியா கில்லாட், இதேபோல ரட்டிடம் இருந்து கட்சியின் தலைமைத் துவத்தைப் பறித்து பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெவின் ரட் மறுபடியும் பிரதமராக வர, நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொழிற்கட்சி கன்சர்வேடிவ் கட்சியிடையே போட்டியும் கடுமையடைந்துள்ளது.

ஜூன் 26ஆம் தேதி பிரதமர் ஆனதிலிருந்து பல முக்கிய அரசு கொள்கைகளில் கெவின் ரட் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

பொருளாதாரம், தஞ்சம் கோரி வருபவர்களை எப்படிக் கையாளவது என்ற விவகாரம், பருவநிலை மாற்றம் போன்ற விஷயங்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய தேர்தல் விவகாரங்களாக அமைந்திருக்கின்றன.

அஸ்ஸான்ஞ் கட்சிக்கு ஆதரவு

Image caption அஸ்ஸான்ஜ்

இதனிடையே, விக்கிலீக்ஸ் தோற்றுநரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் ஆரம்பித்த விக்கிலீக்ஸ் கட்சிக்கு 26 சதவீத வாக்களர்கள் ஓட்டுப்போடத் தயாராக இருப்பதாக தேசிய கருத்துக் கணிப்பு ஒன்று காட்டியுள்ளது.

வாக்காளர்கள் ஆயிரம் பேரிடம் கருத்தை சேகரித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் ஓராண்டுகாலமாக தங்கியிருக்கும் ஜூலியன் அஸ்ஸான்ஜ், ஆஸ்திரேலிய மக்களிடையே தனக்குள்ள ஆதரவை அறிந்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இவரது கட்சி ஆஸ்திரேலிய செனெட் மன்றத்துக்கு ஏழு வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.