ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எண்ணெய் பனையின் மரபணுத் தொடர் தொகுக்கப்பட்டுள்ளது

எண்ணெய் பனையின் மரபணுத் தொடரை முழுமையாக தொகுத்துள்ளதாக மலேசிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Image caption இந்த மரத்தின் உயரத்தையும் ஆய்வுகள் குறைக்கும் என்று நம்பிக்கை.

அவர்களது ஆராய்ச்சியும் அதன் முடிவுகளும் சர்வதேச அறிவியல் சஞ்சிகையான ‘தி நேச்சரில்’ வெளியாகியுள்ளது.

இதன் மூலம் மலேசியாவில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் அழிக்கப்படுவது வெகுவாக குறையும் என்று, இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த மலேசிய செம்பனை வாரியத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் ராஜா நாயுடு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Image caption ஆய்வின் முடிவுகள் காடுகள் அழிவதை தடுக்கக் கூடும்

மலேசிய அரசு இனி எண்ணெய் பனைகளை நடுவதற்காக கூடுதலாக காடுகளை அழிக்கக் கூடாது என்றும், நாட்டின் நிலப்பரப்பில் ஐம்பது சதவீதம் காடாகவே இருக்கும் என்றும் அறிவித்துள்ள நிலையில், இந்த ஆய்வும், அதன் முடிவும் முக்கியத்துவம் பெறுகின்றன எனவும் அவர் கூறுகிறார்.

உயரிய தொழில்நுட்பம் மூலம் விளைச்சலை அதிகரிக்கவும், பனை எண்ணெயின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலியே இந்த மரபணுத் தொடரை தொக்கும் பணி முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

Image caption இப்பழங்களின் மரபணுத் தொடரே இப்போது தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட பனையிலிருந்து 30 சதவீதம் வரை கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் ராஜா நாயுடு மேலும் தெரிவித்தார்.

குளிர் காலங்களில் பனை எண்ணெய் உறைந்து போகாமல் இருப்பதை இந்த மரபணுத் தொடரின் புரிதல் உதவும் என்றும், அதன் மூலம் அதிகமாக குளிர் நிலவும் நாடுகளுக்கு பனை எண்ணெய் ஏற்றுமதியாகும் போது அது இறுதி வரை திரவ நிலையிலேயே இருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.