கொங்கோ: ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்ட சிறார் மீட்பு

கொங்கோவின் கடங்கா மாகாணத்தில் ஏழைப் பிள்ளைகள்
Image caption கொங்கோவின் கடங்கா மாகாணத்தில் ஏழைப் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில் சேர்க்கப்பட்டனர்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது.

எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர்.

அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இப்பிள்ளைகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்களில் 13 பேர் சிறுமிகள் ஆவர்.

காப்பாற்றப்பட்ட பிள்ளைகளில் நாற்பது பேர் தத்தமது குடும்பத்தாரிடம் சேர்க்கப்பட்டுவிட்டார்கள் என்றும் மற்றவர்கள் அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்துவருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடாங்கா மாகாணம் கொந்தளிப்பான பகுதியாகவே தொடர்ந்து இருந்துவருவதாக இப்பகுதி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இம்மாகாணத்தின் தெற்கில் வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் செயல்பட்டுவரும் நிலையில், ஒப்பீட்டளவில் செழிப்பான தென் பகுதிக்கும், ஏழ்மையில் மூழ்கியுள்ள மாகாணத்தின் வடபகுதிக்கும் இடையே வளங்கள் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் கோரி அப்பகுதியில் ஆயுதக் குழுக்கள் செயலாற்றிவருகின்றன.