கொரிய யுத்தத்தில் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சேர அரசுகள் இணக்கம்

  • 18 ஆகஸ்ட் 2013
யுத்தத்தில் பிரிந்த குடும்பங்கள் மீள ஒன்றுகூடும் நிகழ்வு கடைசியாக 2010-இல் நடந்தது
Image caption யுத்தத்தில் பிரிந்த குடும்பங்கள் மீள ஒன்றுகூடும் நிகழ்வு கடைசியாக 2010-இல் நடந்தது

1950-53 காலப்பகுதியில் கொரிய யுத்தத்தின்போது பிரிந்த குடும்பங்கள் மீள ஒன்றுசேர்வதற்கான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் தென்கொரியாவின் திட்டத்திற்கு வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது.

வடகொரியாவின் சுற்றுலா மையமொன்றில் வரும் செப்டெம்பர் 19-ம் திகதி இந்த ஒன்றுசேர்தல் நிகழ்வு நடக்க ஏற்பாடாகியுள்ளது.

கடைசியாக 2010-ம் ஆண்டில் நடந்த இந்த குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வை மீள ஆரம்பிப்பதற்கான அழைப்பை தென்கொரிய அதிபர் பக் குன் ஹெய் கடந்த வாரம் விடுத்திருந்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக கூட்டு தொழில் பேட்டை ஒன்றை மீளத் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள நிலையிலேயே அதிபரின் இந்த அழைப்பு வந்தது.

போரின் பின்னர் கொரிய தீபகற்பம் இரண்டாக பிளவுபட்டபோது, பல குடும்பங்களும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

1998-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுவரை இந்த குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு தொடர்ந்து நடந்துவந்தது.

ஆனால் சுற்றுலாப் பயணி ஒருவர் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ஊடுறுவ முற்பட்டபோது வடகொரிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்தே, இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது.