மாலத்தீவு: இளம்பெண்ணுக்கு உத்தரவிடப்பட்ட கசையடி தண்டனை ரத்து

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருக்கிறது மாலத்தீவு
Image caption சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருக்கிறது மாலத்தீவு

திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட 15 வயதான மாலத்தீவு பெண்ணுக்கு உத்தரவிடப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பெண் வேறோரு ஆணோடு உடலுறவு கொண்டதாக சிறார் நீதிமன்றம் கண்டறிந்தது தவறு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக இப்பெண்ணுடைய தாயின் கணவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வது மாலத்தீவில் சட்ட விரோதமானது ஆகும்.

இந்தப் பெண்ணுக்கு 100 சவுக்கடி கொடுக்குமாறு கொடுக்கப்பட்ட தீர்ப்பை கடுமையாக சாடியிருந்த அம்னெஸ்ட்டி இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளது.

திருமணத்துக்கு வெளியே உறவு கொண்டார்கள் என்பதற்காக யாரும் தண்டிக்கப்படக் கூடாது என அம்னெஸ்ட்டியின் ஆசிய பசிபிக் வட்டகை இயக்குனர் பாலி டிரஸ்காட் கூறியுள்ளார்.

"சவுக்கடி கொடுப்பத்து கொடூரமானது, மனிதத் தன்மையற்றது, சிறுமைப்படுத்துவது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாலியல் வல்லுறவுக்குப் பிறகு கடுமையான மன-அழுத்தத்தில் இருந்தபோது, அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சி

அந்தப் பெண் 18 வயதை அடைந்தவுடன் சவுக்கடி வழங்கப்பட வேண்டும் என்று சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் எழுந்த நிலையில், அத்தீர்ப்புக்கு எதிராக மாலத்தீவு அரசு பிப்ரவரியில் மேன்முறையீடு செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து மாலத்தீவு அதிபர் முகமது வாகீத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியான காரணங்களால் அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட முடியாது.

அந்தப் பெண் மற்றொரு ஆணுடன் சுயவிருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டிருந்ததாக காவல்துறை விசாரணைகளின்போது தெரியவந்தது.

நாட்டின் வடக்கேயுள்ள ஒரு தீவில் சிறிய குழந்தையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்தது.

அந்தப் பெண்ணை அவருடைய தாயின் கணவனே வன்புணர்ச்சி செய்தார் என்றும், அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை அவர் கொன்றார் என்றும் தற்போது காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

மாலத்தீவில் இஸ்லாமிய சட்டங்களும், ஆங்கிலேய சட்டக் கூறுகளும் பின்பற்றப்படுகின்றன.