சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது

  • 28 ஆகஸ்ட் 2013
ஐநா கண்காணிப்பாளர்கள்
Image caption ஐநா கண்காணிப்பாளர்கள்

டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா, ஐநாவின் எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டுவருவதற்கு முன்னதாக, சிரியாவில் உள்ள ஐநா இரசாயன ஆயுத பரிசோதகர்கள் அவர்களது பணியை முடித்தாக வேண்டும் என்று கூறியுள்ளது.

பாதுகாப்பு குறித்த கரிசனைகளால் தமது நடவடிக்கைகள் தாமதமடைந்ததை அடுத்து முன்னதாக டமாஸ்கஸில் பரிசோதகர்கள், தமது பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் தமது புலனாய்வை முடிப்பதற்கு 4 நாட்களாவது ஆகும் என்று ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் ஒரு நாள் மட்டும் நீடிக்கக் கூடிய அளவில் குறிகிய அளவில் இருக்காது என்று ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.

இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி யோசித்து வரும் நாடுகள் - அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் யோசித்து வருவதாக தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையில் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருப்பதும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

Image caption அமெரிக்க போர்கப்பல்

சிரியாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரசாயன ஆயுத தாக்குதள் குறித்த உளவுத் தகவல்களை அமெரிக்கா புதன் மாலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையே, மேற்கு நாடுகள் சிரியா மீது வான் தாக்குதலை ஆரம்பிக்கும்பட்சத்தில் அதற்கு சிரியா பதில் நடவடிக்கைகளை எடுத்தால், தயாராக இருக்குமாறு தமது படையினருக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேல், மேலதிக ஏவுகணை அலகுகளையும் நிறுவியுள்ளது.

எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலில் பதற்றத்துக்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும், ஆனால் அங்கு விஷவாயுவைத் தடுக்கும் முகமூடிகளுக்காகவும், வடக்கில் வான் தாக்குதலுக்கான பங்கர்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதாகவும் அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

சிரியா மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால், அனைத்து பிராந்தியமுமே ஆபத்துக்குள்ளாகிவிடும் என்று முன்னதாக இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரித்துள்ளார்.