"சிரியா மீதான நடவடிக்கையை அமெரிக்கா தனியாகவே மேற்கொள்ளும்"

சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது இவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசும்போது ஜான் கெர்ரி இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்கா இறுதியில் என்ன முடிவை எடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்பதே ஒபாமாவின் கொள்கையாக இருப்பதாக ராணுவச் செயலர் சக் ஹேகல் தெரிவித்திருக்கிறார்.

சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் தோற்றுப்போன செயலானது, உலக அரங்கில் தொடர்ந்தும் பிரிட்டன் முக்கிய பங்களிப்பை ஆற்ற விரும்புகிறதா என்கிற விவாதத்தை தோற்றுவித்திருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இதனால் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிறப்பு உறவு பாதிக்கப்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு என்பது பழமையானது, ஆழமானது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு நடந்த வாக்கெடுப்பில் 13 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 272 வாக்குகளும் எதிராக 285 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை தாம் மதிப்பதாகவும் ஏற்பதாகவும் தெரிவித்திருக்கும் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன், இதன் மூலம், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை பிரிட்டனின் நாடாளுமன்றமும் பிரிட்டிஷ் குடிமக்களும் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரியவந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இந்த வாக்கெடுப்பின் முடிவு காரணமாக, சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பிரிட்டனின் பங்களிப்பு இருக்காது. கேமரன் தலைமையிலான தற்போதைய அரசு வாக்கெடுப்பில் தோற்றிருந்தாலும் பிரிட்டனின் நாடாளுமன்ற ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது என்று ஒருசாரார் வாதாடுகிறார்கள்.

அதேசமயம், பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை அரசுக்கு பதிலாக எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்களும் வடிவமைப்பதை இந்த வாக்கெடுப்பு காட்டியிருப்பதாக கூறும் மறுசாரார், இது சர்வதேச அரங்கில் பிரிட்டனின் ஆளுமையையும் செல்வாக்கையும் குறைக்கவும் குலைக்கவும் செய்யும் என கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தி குறித்து மேலும்