சிரியா இரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாகச் சொல்வது முட்டாள்தனம்: புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
Image caption ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

சிரியாவின் அரசாங்கம் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில் இரசாயன ஆயுதங்களைக் கொண்டுத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.

சிரியாவின் அரசாங்கம் கிளர்ச்சிக்கார படைகளை எதிர்த்து அதிக வெற்றி பெறுவருகின்ற ஒரு நேரத்தில், மேற்குலக நாடுகள் சிரியா மீது இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான துருப்புச் சீட்டு மாதிரியான ஒரு காரியத்தை சிரியாவின் அரசாங்கம் செய்யும் என்று சொல்வது முட்டாள்தனமாக உள்ளது என்று அவர் கூறினார்.

தங்களது குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருந்தால் அதனை அவர்கள் ஐநா பாதுகாப்பு சபையின் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று புடின் தெரிவித்தார்.

"ஆதாரம் இருந்தால் அதனை ஐநா கண்காணிப்பாளர்களிடமும், ஐநா பாதுகாப்பு சபையிடமும் அதைக் காட்ட வேண்டும். அந்த ஆதாரம் இருக்கிறது ஆனால் அது அது ரகசியம், அதனை யாரிடமும் காண்பிக்க மாட்டோம் என்று சொன்னால் அது முறையல்ல. ஆதாரம் இருந்தால் காட்டவேண்டும். காட்ட வில்லை என்றால் ஆதாரம் இல்லை என்றுதான் பொருள்"

சமாதானத்துக்கான நொபெல் பரிசு பெற்றவரான அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரியா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அதனால் அந்த நாட்டில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் கஷ்டங்களை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிரியா மீதான சர்வதேச இராணுவ நடவடிக்கையில் பிரிட்டிஷ் துருப்புகள் பங்கேற்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அனுமதி மறுத்துள்ளது தனக்கு வியப்பை அளித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் குறிப்பிட்டார்.

சிரியாவின் முக்கிய கூட்டாளி நாடான ரஷ்யாவும் சீனாவும், சிரியாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு சபை தீர்மானங்களை இயற்ற முயன்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் அதனை எதிர்த்து வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் கருத்துக் கணிப்பு

Image caption பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லோந்த்

சிரியா அரசாங்கத்துக்கு தண்டனையாக அதன் மீது சர்வதேச இராணுவ நடவடிக்கை எடுப்பதையே தான் விரும்புவதாக பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஒல்லோந்த் கூறியிருந்த நிலையிலும், அப்படியான இராணுவ நடவடிக்கையை பிரஞ்சு மக்கள் ஆதரிக்கவில்லை என்பதாக அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

ல பரீஸியன் ஒஜூர்துயி என்ற செய்தித்தாள் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 64 சதவீதம் பேர் சர்வதேச இராணுவத் தலையீட்டை தாம் எதிர்ப்பதாகவும், 58 சதவீதம் பேர் அப்படி ஒரு இராணுவ நடவடிக்கையை நடத்தப்படுவதில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்தை தாங்கள் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் வன்முறைத் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்துவிடும் என இக்கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டிருந்தவர்களில் 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதன் ஒரே கூட்டணி அரசாங்கமாக பிரான்ஸ் மட்டுமே இருந்துவருகிறது.

இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் அமெரிக்க அதிபருக்கோ, பிரஞ்சு அதிபருக்கோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது