காஷ்மீர் மோதல் முடிவுக்கு வந்தது

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் காவல் நிலையம் மீதும், இராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்தியப் படையினர் கூறுகின்றனர்.

இராணுவச் சீருடை போன்ற உடையணிந்த ஆயுததாரிகள் முதலில் காவல்நிலையம் ஒன்றைத் தாக்கியதாகவும், அதன்பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லையருகே இருக்கும் இராணுவ முகாமைத் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில், லெப்டினன்ட் கர்னல் ரேங்கில் இருக்கும் இந்திய இராணுவத்தின் 16 ஆவது கவசப் படையின் துணைத் தளபதி கொல்லப்பட்டதாகவும், இந்தப் படையணியின் கர்னல் சுடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலில் மொத்தமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று வர்ணித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இதன் காரணமாக பாகிஸ்தானுடனான அமைதி முயற்சிகள் தடைபடாது என்றும் கூறியுள்ளார்.

ஐநா பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மன்மோகன் சிங், அங்கே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.