இங்கிலாந்தில் பெண் ஆயர்கள் நியமனம் பற்றி ஆராய மத்தியஸ்தர்

Image caption கடும்போக்கு பாரம்பரியமான தேவாலய பங்குகள் பெண் பிஷப் நியமனத்தை எதிர்க்கின்றன

பிரிட்டனில், இங்கிலாந்து திருச்சபையின் கீழே பெண் ஆயர்களை (பிஷப்) உருவாக்குவது தொடர்பான இழுபறி நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை திருச்சபை முன்வைத்துள்ளது.

இங்கிலாந்து திருச்சபையின் பாரம்பரியத்தை கடும்போக்காக வலியுறுத்தும் தேவாலயப் பிரிவுகள் (பங்குகள்) பெண் ஆயர்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தப் பிரிவினரின் கோரிக்கைகளை பரிசீலிக்கக்கூடிய ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதற்காக இங்கிலாந்து திருச்சபை சுயாதீனமான மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த மத்தியஸ்தரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் மதகுருமார் திருச்சபையின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படலாம்.

இங்கிலாந்து திருச்சபையின் உச்சபீடம் இந்தத் திட்டங்கள் பற்றி அடுத்த மாதம் விவாதிக்கவுள்ளது.

பெண் ஆயர்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டவரைவொன்றை அங்கீகரிப்பதற்கு கடந்த நவம்பரில் திருச்சபையின் உச்சபீடத்தால் முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.