'பிலிப்பைன்ஸ் சூறாவளியில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி
Image caption பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி

பிலிப்பைன்ஸை தைப்பூன் ஹையான் சூறாவளி தாக்கியதில் ஒரு மாகாணத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக தாம் நம்புவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட கிராமங்களின் அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புதிய எண்ணிக்கையை தாம் எட்டியுள்ளதாக லெத்தே மாகாணத்தின் பொலிஸ் தலைவர் கூறியுள்ளார்.

பெரும்பாலானவர்கள் ஒன்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது இடிந்த கட்டிடங்களில் அகப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள சமர் தீவில் 300 பேர் இறந்துபோனதாகவும், இரண்டாயிரம் பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இராணுவ விமானங்களில் ஆட்கள் கொண்டு செல்லப்பட்டும், உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டும், பெரும் எடுப்பிலான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

'முற்றான நிர்மூலம்'

இந்தச் சூறாவளியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தக்லொபான் நகரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு ஒட்டுமொத்த அழிவை தான் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

லெய்தேவின் தலைநகரில் வீடுகள் எல்லாம் தரைமட்டமாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

அங்கு சுத்தமான குடிநீர், மின்சாரம் எதுவும் கிடையாது என்றும் உணவும் போதாது என்றும் அவர் கூறியுள்ளார்.

உதவிகளை தாம் விநியோகிப்பதற்கு சிரமப்படுவதாகவும், அங்கு பரவலாக சூறையாடல் சம்பவங்கள் நடப்பதாகவும் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சூறாவளி அழிவுகளை, சுனாமியுடன் ஒருவர் ஒப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அங்கிருந்து வெளியேறுவதற்காக, நிர்மூலமாகிக் கிடக்கும் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்துக் கிடப்பதாகவும் செய்தியாளர் கூறுகிறார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்