உணவு, குடிநீர் தரப்படாத நிலையில் சௌதியில் நைஜீரியத் தொழிலாளர்கள்

  • 20 நவம்பர் 2013
Image caption சௌதி அரேபியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர் நிலை ( ஆவணப்படம்)

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இன்னும் தமது இருப்பை சட்டரீதியாக சரி செய்து கொள்ளாதவர்களை தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கை தொடருகிறது.

அந்த வகையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிடங்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி அந்த கிடங்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதிய குடிநீரோ அல்லது உணவோ கொடுக்கப்படவில்லை என்று அவர்களில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மெக்காவுக்கும் ஜெத்தாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் அந்தக் கிடங்கில் குளிர் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தங்களுக்கு நைஜீரிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், இரண்டு வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் தமது நாட்டு தூதரகத்திலிருந்து யாரும் வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேபோல தலைநகர் ரியாதுக்கும் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமுக்கு இருபதாயிரத்துக்கும் அதிகமான எத்தியோப்பியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.