சிரியா மோதலால் உளவியல் ரீதியான பாதிப்பில் சிறார் அகதிகள்

Image caption சிரியா மோதலில் உளவியல் ரீதியான பாதிப்பில் குழந்தைகள்

சிரியாவில் நடந்து வரும் மோதல்களினால் நாட்டை விட்டு தப்பியோடிய சிறார்களில் பலர், அந்நாட்டு போர் அனுபவத்தினால் மிகுந்த மன அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவிலிருந்து வெளியேறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 2.2 மில்லியன் அகதிகளில் பாதி பேர் சிறுவர் ,சிறுமியர் ஆவர். இவர்களில் பலர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல், பிழைப்பதற்காக வேலை செய்கிறார்கள்.

சில குழந்தைகள் பெற்றோர்கள் கொல்லப்பட்டு அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையை எதிர்கொள்கின்றனர். மிகுந்த மன அதிர்ச்சிக்கு உள்ளாகிய சிறுவர்களுள், பெற்றோர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்து பின் அவர்களின் பிரேதங்களை புதைத்த சிறுவர்களும் உள்ளனர்.

மேலும் ஜோர்டான் மற்றும் லெபனானில் இருக்கும் அகதிகள் மத்தியில் கோபமும் வெறுப்பும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பின் அறிக்கை எச்சரித்துள்ளது.