எகிப்தில் அல்- ஜசீரா ஊடகவியலாளர்கள் கைது

Image caption பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டே

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஜசீரா செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் குழுவினர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அல் ஜசீரா தொலைக்காட்சி வலையமைப்பின் கெய்ரோ பணியகத் தலைமை செய்தியாளர் மொஹமட் ஃபாதல் ஃபாஹ்மியும் பிபிசியின் முன்னாள் பிராந்திய செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டேவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.

மொஹமட் ஃபாதல் ஃபாஹ்மி கனேடிய பிரஜை. பீட்டர் கிரெஸ்டே ஆஸ்திரேலியப் பிரஜை.

இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறு அல்ஜசீரா கோரியுள்ளது.

கடந்த வாரம் ஒரு பயங்கரவாத அமைப்பாக ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருடன் சட்டவிரோத சந்திப்புகளை நடத்தியுள்ளதாகத்தான் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் மொஹமட் மோர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டது முதல் எகிப்தில் ஊடகங்களுக்கான சூழல் மிகவும் மோசமாக மாறிவிட்டது.

இராணுவ ஆட்சியாளர்கள் நாட்டைப் பொறுப்பேற்றப் பின்னர் இஸ்லாமியவாத ஊடகங்கள் பல மூடப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.