நாத்திகர் என்பதால் அகதித் தஞ்சம்

பிரிட்டனிலும், மேற்கத்திய உலகிலும் இறைமறுப்பு கொள்கைகள் நன்கு வேரூன்றியுள்ளன படத்தின் காப்புரிமை 1
Image caption பிரிட்டனிலும், மேற்கத்திய உலகிலும் இறைமறுப்பு கொள்கைகள் நன்கு வேரூன்றியுள்ளன

நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது.

ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நாத்திகர் என்பதற்காக ஒருவருக்கு பிரிட்டனில் அகதித் தஞ்சம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆப்கனில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதில் பிரிட்டனுக்கு வந்தார். இங்கு அவர் நாத்திகரானார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து கருத்துக் கூற உள்துறை அலுவலகம் மறுத்துவிட்டது. தேவைப் படுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் சிறப்பான பாரம்பர்யம் கொண்ட நாடு பிரிட்டன் என்று அது கூறியுள்ளது.