'ஸ்காட்லாந்து எம்முடனேயே இருக்க வேண்டும்': பிரதமர் கெமரன்

  • 7 பிப்ரவரி 2014
Image copyright Getty
Image caption பிரதமர் டேவிட் கெமரன்

ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட- அயர்லாந்து பிராந்தியங்களின் மக்கள் கோர வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்து தனிநாடாக சுதந்திரம் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு செப்டெம்பெரில் நடக்கிறது.

ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்று தீர்மானித்தால், முழு ஐக்கிய இராச்சியமும் 'மோசமாக சுருங்கிவிடும்' என்று பிரதமர் கெமரன் லண்டனில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

அதேபோல, நாடு ஐக்கியப் பட்டிருக்கவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் 'அலட்சியமாக' இருந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேநேரம், டேவிட் கெமரன் 'கோழைத் தனமாக' இந்த உரையை ஸ்காட்லாந்தில் ஆற்றவில்லை என்று ஸ்காட்லாந்து தேசியக் கட்சி கூறியுள்ளது.

கிழக்கு லண்டன் ஒலிம்பிக் பார்க் அரங்கில் உரையாற்றிய கெமரன், 2012- ஒலிம்பிக் போட்டிகளில் 65 பதக்கங்களை வென்ற பிரிட்டன் ஒலிம்பிக் அணியின் ஒற்றுமை உணர்வை நினைவுகூர்ந்தார்.

ஆளும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி வாக்குறுதி அளித்தபடி, எதிர்வரும் செப்டெம்பர் 18-ம் திகதி நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஸ்காட்லாந்தில் வாழும் 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.

'உலகில் பெரிய பங்கு வகிக்கும் நாடொன்றின் அங்கமே ஸ்காட்லாந்து' என்று கூறிய கெமரன், 'ஒட்டுமொத்த 63 மில்லியன் ( 6.3 கோடி) பேரான நாம் எல்லோரும் இந்த வாக்கெடுப்பால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம்' என்றும் தெரிவித்துள்ளார்.