ஸோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 வெள்ளியன்று தொடக்கம்

படத்தின் காப்புரிமை Getty
Image caption கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஸோச்சி வின்டர் ஒலிம்பிக்ஸ்

குளிர்கால ஒலிம்பிக் 2014 ரஷ்யாவின் ஸோச்சி கடலோர-சுற்றுலா நகரில் வெள்ளியன்று அதிகாரபூர்வமாக தொடங்குகிறது.

முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மிகப் பெரும் பணச் செலவில் இந்த விளையாட்டு விழா நடக்கிறது.

சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்ப விழா தொடர்பான விபரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் அவர்களின் நாட்டு வரைபடங்களுடன் மைதானத்தின் மத்தியில் தோன்றுவார்கள் என்ற விபரத்தை மட்டும் ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இம்முறை வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் பற்றிய பிரச்சாரங்கள் பல்வேறு கவலைகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன.

விளையாட்டரங்குகளுக்கான பாதுகாப்பு, மனித உரிமை விவகாரங்கள் மற்றும் மைதான கட்டுமானங்களில் ஏற்பட்ட தாமதங்கள் போன்ற விவகாரங்களால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

ஆனால், இனிமேல் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் கவனம் குவியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முந்தைய வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் செலவினங்களுக்கும் அதிகமாக, இம்முறை போட்டிகளுக்காக 40 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.