தென்- ஆப்பிரிக்காவிடம் பாடம் படிக்கச் செல்லும் இலங்கைத் தூதுக்குழு

  • 19 பிப்ரவரி 2014
படத்தின் காப்புரிமை AP
Image caption தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி செலுத்தியபோது ( கோப்புப் படம்)

தென்னாப்பிரிக்காவிடம் பாடங்களை கற்றுக்கொள்வதற்காக அந்நாட்டுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நிறவெறி ஆட்சிக் காலத்துக்குப் பின்னரான உண்மை கண்டறியும்- நல்லிணக்க ஆணைக்குழு பற்றி கற்றறிந்துகொள்வதற்காக இந்தத் தூதுக்குழுவினர் அங்கு செல்லவுள்ளதாக இலங்கை கூறியுள்ளது.

ஐந்துபேரடங்கிய இந்தத் தூதுக்குழுவினர் தென்னாப்பிரிக்காவில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பர்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுத்துவருகின்றன.

இலங்கையின் போரில் நடந்துள்ள கொடூரங்கள் பற்றி முறையான விசாரணை நடத்தத் தவறியுள்ளமை தொடர்பில் இலங்கை மீது தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்ற அமெரிக்கா தயாராகிவருகிறது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு தூதுக்குழு அனுப்பும் இந்தப் புதிய நகர்வில் இலங்கை இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.