காங்கோ ஆயுதக் குழுத் தலைவன் கட்டாங்கா போர்க் குற்றவாளி

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஒரே இரவில் 200 பொதுமக்களைக் கொன்றமைக்காக கட்டாங்கா போர்க் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

காங்கோவின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவன் ஜேர்மைன் கட்டாங்கா போர்க் குற்றவாளி என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை கட்டாங்கா புரிந்துள்ளதாக த ஹேக்- நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது.

காங்கோவின் போகோரோ கிராமத்தில் போர்க்காலத்தின் போது மக்களைக் கொன்றதாகவும் சொத்துக்களை சூறையாடியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும், பாலியல் குற்றங்கள் அல்லது சிறார்களைப் படையில் சேர்த்தமை உள்ளிட்டக் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2003-ம் ஆண்டில் காங்கோவின் யுகாண்டா எல்லைக் கிராமமான போகோரோவில் ஓர் இரவுப் பொழுதில் கட்டாங்கா தலைமையில் நடந்த அட்டூழியங்களில் கிட்டத்தட்ட 200 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலைகளிலிருந்து தப்பிய பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டாங்கா மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தன.

பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் ஐசிசியில் விசாரணை நடந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவே.

அதேநேரம், ஒரே தாக்குதல் சம்பவத்தை மட்டும் மையப்படுத்தி சர்வதேச குற்றவியல் விசாரணை நடந்துள்ளமையும் இந்த வழக்கில் முக்கியத்துவம் மிக்கதாகப் பார்க்கப்பட்டது.