க்ரைமீயாவில் கருத்தறியும் வாக்கெடுப்பு

வாக்குச்சாவடியில் மக்கள் படத்தின் காப்புரிமை Other
Image caption வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

யுக்ரெய்னுடன் இருந்துவருகின்ற க்ரைமீயா பிராந்தியம், அதிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்பது சம்பந்தமான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு க்ரைமீயா தீபகற்பத்தில் நடந்துவருகிறது.

க்ரைமீயாவின் கட்டுப்பாட்டை தற்போது கையெடுத்துள்ள ரஷ்ய ஆதரவு நிர்வாகம் இந்த கருத்து வாக்கெடுப்பை நடத்துகிறது.

க்ரைமீயா மேலதிகமான சுயாட்சி அதிகாரத்துடன் யுக்ரெய்னுக்குள்ளேயே நீடிக்க வேண்டுமா அல்லது ரஷ்யாவுடன் இணைய வேண்டுமா என, ரஷ்ய இன மக்கள் பெரும்பான்மையாகவுள்ள க்ரைமீயாவின்வின் இருபது லட்சம் குடிமக்களிடம் கருத்து கேட்டு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என யுக்ரெய்னும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளும் கூறுகின்றன.

வாக்குச்சாவடிகளின் முன்பு நெடிய வரிசைகளில் மக்கள் காத்து நின்று வாக்களிப்பது, சோவியத் ஒன்றிய காலத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது என க்ரைமீயாவின் தேர்தல் ஆணையத்துடைய தலைவர் கூறினார்.

இந்த கருத்து வாக்கெடுப்பின் முடிவு ஏற்கனவே தெரிந்த முடிவுதான் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

க்ரைமீயாவில் ரஷ்ய துருப்பினரும் ரஷ்ய ஆதரவு தற்பாதுகாப்பு படையினரும் நிறைய அளவில் காணப்படுகின்றனர்.

க்ரைமீயாவின் ஜனத்தொகையில் 12 சதவீதமாக இருக்கின்ற டார்டார் இன மக்கள் இந்தக் கருத்து வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளனர்.