மலேசிய விமானத் தேடலில் புதிய பொருட்கள்

  • 26 மார்ச் 2014
Image copyright BBC World Service
Image caption தேடுதல் வேட்டை தொடர்கிறது

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடுதல் பணியில் புதியதாக 122 பொருட்களை செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாகவும், இவை காணாமல் போன விமானத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் ஏர்பஸ் கொடுத்துள்ள இந்த தகவல்கள் ஆஸ்திரேலியாவின் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏர்பஸினால் காணப்பட்டுள்ள பொருட்கள் 23 மீட்டர் நீளம் உடையதாக கூட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படங்கள் மார்ச் 23 ஆம் தேதி அன்று எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே 2557 கி.மீ தொலைவில் 400 சதுர கி.மீ பரப்பில் இந்த பொருட்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இடை நிறுத்தப்பட்டிருந்த மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் புதன்கிழமை கால நிலை சற்று மேம்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் தொடங்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த முயற்சியில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்த 12 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்று ஆஸ்திரேலியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சா, தெரிவிக்கிறது.

"நம்மிடம் இருக்கும் அனைத்து திறனையும்" இந்தத் தேடல் வேட்டையில் பயன்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியிருக்கிறார்.

இந்தத் தேடுதல் முயற்சி, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குத் தென்மேற்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 1,500 மைல் பரப்பளவுள்ள பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இந்த முயற்சியில் இப்போது ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இப்போது ஈடுபட்டிருக்கின்றன. இந்த விமானங்களில் ஏழு ராணுவ விமானங்கள், ஐந்து சிவிலியன் விமானங்களாகும்.

இது தவிர ஆஸ்திரேலியப் போர்க்கப்பலான , எச்.எம்.ஏ.எஸ்.சக்சஸ் என்ற கப்பலும்,சில சீனக் கப்பல்களும் இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

"நிலவைப் பற்றி அதிகம் தெரியும், இந்தக் கடலின் தரை பற்றி தகவல்கள் இல்லை"

ஆனால், கால நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இன்னும் மோசமடையலாம் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, விமானத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, விமானம் அல்லது அதன் கறுப்புப் பெட்டி போன்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட மேலும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பெருங்கடலின் இந்த குறிப்பிட்ட தென்பகுதியின் அடி நிலத்தின் தன்மை பற்றி அதிகத் தரவுகள் இல்லை என்று பிரிட்டனின் ரெடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெருங்கடலியல் துறைப்பேராசிரியர் டேவிட் பெரெய்ரா கூறினார்.

" நமக்கு நிலவின் மேற்பரப்பைப் பற்றித் தெரிந்திருப்பதைவிட, குறைவான அளவே இந்த இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழ்நிலப் பரப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்திருக்கிறது" என்றார் அவர்.

விமானம் ஏன் விழுந்தது என்பது குறித்த காரணங்கள் இன்னும் மர்மமாகவே நீடிக்கின்றன.